2023-ல் இரண்டு முக்கியமான விஷயங்கள் ரீலீஸ் ஆக காத்துக்கொண்டிருப்பதாக இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், 'ராஜா ராணி' மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்துப் பழகிப்போன கதை தான் என்றாலும் தனது தனித்துவமான, ஜனரஞ்சகமான மேக்கிங்கால் 'ராஜா ராணி' படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் 'ராஜா ராணி' படம் பலருக்கும் விருப்பமான, வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர்ந்து தளபதி விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். தமிழின் உச்ச நட்சத்திரமான விஜயுடன் தொடர்ந்து 3 படங்கள் இணைந்து பணியாற்றியது அவரை முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் இணைத்தது.

இந்நிலையில், பிகில் படத்தையடுத்து அவர் ஷாருக்கானை வைத்து இந்தியில் 'ஜவான்' படத்தை இயக்குகிறார். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ‘Red Chillies Entertainment’ நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ரூபன் இப்படத்தின்  படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜவான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் மற்றும் இன்னொரு ரிலீஸ் குறித்த அப்டேட்டை அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் 2023 புத்தாண்டு நல்வாழ்த்துகள். நாங்கள் இந்த வருடம் இரண்டு ரிலீஸ்களை எதிர்நோக்கியவாறு காத்திருக்கிறோம். ஒன்று பிப்ரவரியில் குழந்தையின் ரிலீஸ்; மற்றொன்று ஜுன் 2-ல் ஜவான் ரிலீஸ்"  என்று பதிவிட்டுள்ளார். 

இயக்குநர் அட்லிக்கும், சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை கிருஷ்ணா பிரியாவுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த டிச.16ம் தேதி ப்ரியா கர்ப்பமாக உள்ளதாக ட்விட்டரில் அட்லீ தெரிவித்திருந்தார். இது அவர்களது முதல் குழந்தையாகும். 

இந்நிலையில் தான் குழந்தை இவ்வருடத்தின் பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது என்ற அறிவிப்பை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ஜவான் ரிலீஸ் ஜூன் 2 என்று பதிவிட்டுள்ளார்.  இதன் மூலம் ஜவான் திரைப்படம் ஜூன் 2ல் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஜவான் படத்தின் கதையும் பேரரசு படத்தின் கதையும் ஒன்று என்று சர்ச்சை கிளம்பியது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளிக்கப்பட்டது. பிறகே இருபடங்களின் கதையும் வெவ்வேறானவை என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜவான் படத்தின் அறிவிப்புத் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜவான் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இரு அப்டேட்டுகள் குறித்து அட்லீ பதிவிட்டுள்ள ட்வீட் உங்கள் பார்வைக்கு.

 

Happy New Year 2023 everyone!
God Willing, we will be blessed with two releases this year 🥳🤩

Expecting Release one in February 👶🏻 ❤️

Release two on June 2 - #Jawan 🎥 ❤️

— atlee (@Atlee_dir) January 1, 2023