தென்னிந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகவும் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளாகவும் இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் நட்புறவோடு இருப்பினும் தமிழ் திரையுலகில் காலம் காலமாக தொடரும் நடிகர் திலகம் - மக்கள் திலகம் சூப்பர் ஸ்டார் - உலகநாயகன் வரிசையில் அடுத்த கட்டத்தில் இருப்பதால் ரசிகர்களிடையே தீப்பொறி பறக்கும்.
 
அதிலும் சமூக வலைதளங்களின் வருகைக்கு பிறகு இன்னும் சூடு பிடித்துள்ளன. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் வாரிசு - துணிவு திரைப்படங்கள் ஒரே தினத்தில் ரிலீஸ் ஆவதால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தோடு இந்த பொங்கலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 
 
முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். கடைசியாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.
 
முன்னதாக கோயம்புத்தூர் மாப்பிள்ளை - வான்மதி, காலமெல்லாம் காத்திருப்பேன் - நேசம், ஃபிரண்ட்ஸ் - தீனா, ஆதி - பரமசிவம், போக்கிரி - ஆழ்வார், ஜில்லா - வீரம் என இதுவரை ஆறு முறை பொங்கல் வெளியீடாக அஜித் குமார் மற்றும் தளபதி விஜய் திரைப்படங்கள் ஒன்றாக ரிலீசான நிலையில் தற்போது 7வது முறையாக வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒன்றாக இந்த பொங்கலுக்கு வெளியாகின்றன.
 
இந்நிலையில் இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களின் ரிலீஸை முன்னிட்டு நமது கலாட்டா சேனலில் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் ரசிகர்கள் இணைந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இருதரப்பு ரசிகர்களும் கலந்து கொண்ட அட்டகாசமான இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அசத்தலான அந்த வீடியோ இதோ…