நயன்தாரா நடிப்பில் வெளியான 'கனெக்ட்' படத்தின் திகிலூட்டும் ‘Behind The Scenes’ வீடியோ வெளியாகியுள்ளது!

நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த டிச.22-ல் வெளியான திரைப்படம் 'கனெக்ட்'. மாயா, கேம் ஓவர் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அஷ்வின் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரித்துள்ளார். மாயா படத்தைத் தொடர்ந்து 'கனெக்ட்' மூலம் அஷ்வின் சரவணன் நயன்தாராவுடன்  2-வது முறையாக இணைந்துள்ளார்.

கனெக்ட் படத்தில் நயன்தாராவுடன், சத்யராஜ், வினய், நஃபிசா ஹனியா, அனுபம் கேர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரித்வி சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் மற்றும் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில், ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளமுடியாத நேரத்தில் நயன்தாராவின் வீட்டில் அரங்கேறும் அமானுஷ்ய நிகழ்வுகளைத் தொகுத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 90 நிமிடங்கள் ஓடும் இப்படம் சினிமா விமர்சகர்களிடையே கலவையான விமர்சங்களைப் பெற்றது. கனெக்ட் படத்தை அடுத்து, அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள 'இறவாக்காலம்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் கூட இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "இது ஒரு கொண்டாட்டமான வருடமாக எனக்கு இருக்கிறது. நன்றியுணர்வால் நிறைந்துள்ளேன். 'கனெக்ட்' திரைப்படத்தை ஆதரித்த அத்தனை சினிமா காதலர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தொடர்ந்து டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து அடுத்தடுத்து காட்சிகளில் படத்தை ரசிக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியுணர்வை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும், "அனைவரது அன்பு, ஆதரவு, கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்கிறோம். இதை எதிர்கால பயணத்திற்கான படிப்பினையாக பயன்படுத்திக் கொள்கிறோம். மீண்டும் உங்கள் அனைவரின் அளவு கடந்த அன்பிற்கு நன்றி உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்சினிமாவில் வெளியாகும் பல்வேறு திகில் படங்களிலும் அஷ்வின் சரவணனின் மாயா, கேம் ஓவர் போன்ற படங்கள் தனித்துத் தெரிந்ததற்கு காரணம், எடுத்துக்கொண்ட 'திகில்' என்ற களத்தில் காமெடி, காதல் என்ற சமாச்சாரங்களை தேவையின்றிச் சேர்த்து கதையை மடை மாற்றாமல், திகில் என்ற ஒற்றை நேர்க்கோட்டில் கதையைக் கடத்திச்செல்லும் பாணியே. 

இதிலும் அதுபோன்ற திகில் என்ற நேர்க்கோடு இடம்பெற்றும், தொழில்நுட்ப ரீதியில் படம் சிறப்பாகவே இருந்தும், எடுத்துக்கொண்ட மிக எளிய கதை மற்றும் சில தொய்வுகள் காரணமாக 'கனெக்ட்' திரைப்படம் பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆகவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட 'Behind The Scenes' எனப்படும் BTS வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.