உக்ரைன் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் ஆபரேஷன் கங்கா மூலம் மனைவி மற்றும் 2 மாத குழந்தையுடன் நாடு திரும்பினார்.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 16-வது நாளாக நீடித்து வருகிறது.  இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் பெண்ணை திருமணம் செய்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் தன்னுடைய மனைவி மற்றும் 2 மாத குழந்தையுடன் நாடு திரும்பினார். கேரளாவைச் சேர்ந்த ரனீஷ் ஜோசப் உக்ரைனில் மாணவர் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது சுமியைச் சேர்ந்த விக்டோரியா என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷிய போரால் சுமியில் மாட்டிக் கொண்ட ஜோசப், நேற்று இரவு டெல்லியில் இருந்து 180 பேருடன் கொச்சி விமான நிலையம் வந்த விமானத்தில் மனைவி விக்டோரியா மற்றும் குழந்தை ஜோசப் ரபேலுடன் நாடு திரும்பினார்.

இதுகுறித்து ஜோசப் கூறியதாவது: 'நான் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்த 14 நாட்களாக நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக சுமியில் இருந்தோம். அங்கு இருந்த அசாத்திய சூழலில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டோம். இப்போது சொந்த ஊர் திரும்பி குடும்பத்தினரை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. பேருந்து, ரெயில், விமானம் என்று 4 நாள் தொடர்ச்சியான பயணத்திற்கு பிறகு இப்போது ஊருக்கு திரும்பியுள்ளோம். 

இந்த பயணத்தின் போது எங்களுடன் இருந்த பலரும் எங்கள் குழந்தையை பார்த்துக்கொள்வதில் எங்களுக்கு மிகவும் உதவியாயிருந்தார்கள். இப்போது எங்களுக்கு ஓய்வு தேவை' என்று கூறினார். மேலும் அவரது மனைவி விக்டோரியா, 'அங்கு நிறைய பிரச்சினைகள் இருந்தது. இப்போது அனைவரையும் நேரில் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கேரளாவிற்கு நான் வருவது இதுவே முதல் முறையாகும்' என்று தெரிவித்தார்.