நள்ளிரவு கடந்தும் செல்போனில் பேசிய மனைவியை தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த மனைவி கணவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் எடப்பாடி அடுத்து உள்ள மசையன் தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் 32 வயதான பாலமுருகன், விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இவரது மனைவி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரீஸ் நகரைச் சேர்ந்தவர் 26 வயதான இலக்கியா. 

இவர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது, பேருந்தில் சென்று வந்த தருணத்தில், அப்போது அந்த பேருந்தில் கண்டக்டராக பணியாற்றிய பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி உள்ளது .

இதனால், இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த தம்பதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு, தற்போது 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

இந்த சூழலில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால், இலக்கியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்து, குழந்தையுடன் கிருஷ்ணகிரியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று உள்ளார்.

அத்துடன், அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், “என் கணவர் என்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி புகார்” அளித்திருக்கிறார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில் தான், அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் இலக்கியா, தனது குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்து, தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு, “நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம்” என்று, கூறியு்ளார். அதற்கு, பாலமுருகனும் சம்தம் தெரிவித்து உள்ளார்.

இந்த சூழலில் தான், கடந்த வெள்ளிக் கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் இலக்கியா யாரிடமோ செல்போனில் நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப்பார்த்த கணவன் பாலமுருகன், “இந்த நேரத்தில் யாரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டு கண்டித்திருக்கிறார். 

இதனால், கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது கடும் ஆத்திரம் அடைந்த மனைவி இலக்கியா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தி உள்ளார். 

இதனால், அலறி துடித்த பாலமுருகனின் சத்தம் கேட்டு, அவருடைய தாயார் ஜோதி ஓடி வந்து இலக்கியாவை தடுத்துள்ளார். அப்போது, தனது மாமியாரையும் இலக்கியா கீழே தள்ளி விட்டுள்ளார். கீழே விழுந்த அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், அவரும் சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைக்கவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாலமுருகனை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, இலக்கியாவை கைது செய்தனர். 

மேலும், இது தொடர்பான விசாரணைக்கு பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.