சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமி ஜனனியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்த நிலையில், தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சேலம் சிறுமி ஸ்ரீஷாவுக்காக அரசு உதவியை அவரது பெற்றோர் நாடி உள்ளனர்.

சேலம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி - ஜெயந்தி தம்பதியினருக்கு ஸ்ரீஷா என்ற குழந்தை இருக்கிறது. 

இந்த குழந்தை பிறந்து வெறும் 9 மாதங்களே ஆன நிலையில், போதிய வளர்ச்சி இல்லாததை அறிந்த அவரது பெற்றோர், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடிச் சென்று உள்ளனர்.

அங்கு குழந்தை ஸ்ரீஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சிகிச்சைக்காகச் சேர்க்க அறிவுறுத்தி உள்ளனர். 

அங்கு குழந்தையை பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் எனப்படும் SMA TYPE 1 இருப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன், “குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால், 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை உடனடியாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்” என்றும், மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால், இன்னும் கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், “நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எங்களால் இவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது” என்று கூறியுள்ளனர்.

மேலும், தங்களது குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், “தமிழக அரசு தங்களது குழந்தையை காப்பாற்ற உதவி செய்யுமாறும்” சேலம் மாவட்ட ஆட்சியரிடம், சிறுமியின் பெற்றோர் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

குறிப்பாக, “9 மாதமே ஆன தங்களது குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து உடனடியாக கிடைக்க தமிழக முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு ஆவணம் செய்ய வேண்டும்” என்றும், குழந்தையின் தாய் ஜெயந்தி கண்ணீர் மல்க ஊடகத்தின் முன்பாக கோரிக்கை விடுத்து உள்ளார்.

இவற்றுடன், கருணை உள்ளம் கொண்டவர்களின் நிதி உதவியையும், அவர்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். இது தொடர்பான செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அதே போல், சேலம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் - ராஜ நந்தினி தம்பதியின் மகள் 14 வயது ஜனனி, 2 சிறுநீரகமும் செயலிழந்து உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகளைக் காப்பாற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர். 

இது குறித்து, சிறுமியின் தாய் ராஜ நந்தினி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் சிறுமி நந்தினியும் பேசியிருந்தார். இந்த வீடியோ முதலமைச்சரின் தனி கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில். சிறுமியின் தாயாரை செல்போனில் அழைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் பேசி உள்ளதாகக் கூறி, ஆறுதலும் தைரியமும் கூறியுள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, தற்போது, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி ஜனனியை, முதலமைச்சர் ஸ்டாலின், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.