தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்து வருகிறார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க , யோகிபாபு, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பு செய்ய ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி விஜய்யின் அடுத்தப் படமாக தளபதி 66 படத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வம்சி, தளபதி 66 படத்தை இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர்  தயாரிக்கின்றனர். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி இருவரும் இன்று திருப்பதியில் தரிசனம் முடித்து திரும்பும் வேளையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் வம்சி, “அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையிலான ஒரு கதைக்களத்தை தளபதி விஜய் அவர்களுக்காக எழுதியுள்ளேன்... தளபதி விஜய் அவர்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது... தளபதி விஜய்யுடன் பணியாற்றவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது... இப்போதைக்கு படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம் வரும் நாட்களில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.