16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் சரவணனால், பெரும் பரபரப்பு ஏறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிபாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன், அங்கு உள்ள டீக்கடை டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

அப்போது, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள தும்பிபாடியில் இருக்கும் தனது பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறார். 

தாத்தா - பாட்டி இருவரும் வயதானவர்கள் என்பதால், சிறுமியின் பெற்றோர் உதவிக்காக சிறுமியை அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் தான் அந்த 16 வயது சிறுமிக்கும், டீகடையில் டீ மாஸ்டராக வேலைப் பார்தது வந்த சரவணனுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த அறிமுகத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட சரவணன், அந்த சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி உள்ளார். மேலும், அந்த சிறுமியிடம் தொடர்ந்து பல ஆசை வலைகளை விரித்து, அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி தாலி கட்டிய சரவணன், அந்த சிறுமியை அவரது பாட்டி வீட்டிலேயே தங்க வைத்து உள்ளார். 

அதே நேரத்தில், அவ்வப்போது அங்கு வந்து சென்ற சரவணன், சிறுமியிடம் “நமக்கு கல்யாணம் நடந்துவிட்டது. நாம் இருவரும் கணவன் - மனைவி” என்று கூறி, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த விசயம், அக்கம் பக்கத்தினருக்குத் தெரிய வந்த நிலையில், சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்தது குறித்து, சேலம் மாவட்டம் சைல்டு லைன் தொலைப்பேசி எண்ணுக்கு ரகசியத் தகவல் கிடைத்து உள்ளது.

இது குறித்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையில், டீ மாஸ்டர் சரவணன் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும், 16 வயது சிறுமி தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அதிகாரிகள், சிறுமியை சேலத்தில் உள்ள காப்பகத்தில் அனுமதித்து உள்ளனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி தற்போது சிறையில் அடைத்து உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.