இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் மாதவன். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சிறந்த நடிகரான மாதவன் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக தயாராகியிருக்கும் ராக்கெட்ரி திரைப்படத்தை நடிகர் மாதவன் எழுதி இயக்கி நடித்துள்ளார். இதில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்க அவரது மனைவியான மீனா நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடித்துள்ளார்.

மேலும் ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார், குல்ஷன் க்ருவர், தினேஷ் பிரபாகர், மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட 6 மொழிகளில் வெளியாகிறது. இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யாவும் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கௌரவ தோற்றத்தில் நடிகர் ஷாருக்கானும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஷா ராய் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள ராக்கெட்ரி திரைப்படத்தை ட்ரை கலர் பிலிம்ஸ் & வர்கீஸ் மூலம் பிக்சர் இணைந்து தயாரித்துள்ளது. விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் இஸ்ரோவின் ரகசியங்களை விற்றதாக போலியான வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் சிறந்த விஞ்ஞானியை முடக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் ராக்கெட்ரி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.  2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ராக்கெட்ரி திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.