தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டையை மையப்படுத்தி வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படம் ஆயுதபூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகிறது. அதே தினத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படமும் ஆயுதபூஜை வெளியீடாக ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சூதுகவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது பெண் குழந்தைக்கு சூட்டிய அழகான பெயரை தற்போது வெளியிட்டுள்ளார். தூய்மை என்ற பொருள் கொண்ட அரியனா என அழகான பெயரை தனது செல்ல மகளுக்கு சூட்டியுள்ளார் ஆர்யா. நடிகர் ஆர்யாவின் மகள் அரியனா-வின் பெயர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.