தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகும் லைகர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கும் லைகர் திரைப்படத்தில் கிக் பாக்சிங் வீரராக விஜய் தேவரகொண்டா நடிக்க கதாநாயகியாக நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், சார்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போக்கிரி & பிசினஸ்மேன் என மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்ம புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்க்கிறார்.

இந்நிலையில் லைகர் திரைப்படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடிக்கிறார் என்ற அதிரடியான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அரங்கில் குத்துச்சண்டை என்றாலே நினைவுக்கு வரும் இரு பெயர்களில் ஒன்று முகமது அலி மற்றொன்று மைக் டைசன். 

இந்திய திரை வரலாற்றில் முதல்முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிகர் மைக் டைசன் நடிக்க இருப்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் விஜய் தேவர்கொண்டா- மைக்டைசன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. விஜய் தேவர்கொண்டா-மைக் டைசன் மோதும் அதிரடி காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.