சென்னையில் பெய்த பெருமழையால்,  நகரின் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையை உடைத்துப்போட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றைய தினம் முதலே மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதை மெய்ப்பிக்கும் விதமாகவே கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்தது.

ஆனால் கணிப்பையும் தாண்டி ‘இப்படிப்பட்ட மழையை எதிர்பார்க்கவில்லை' என்று வானிலை மையமே விளக்கம் தந்தது.  சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பொதுவாகவே தலைநகரை குறிவைத்து தாக்கும் மழை, இந்த முறையும் தனது வலிமையை உணரச் செய்து இருக்கிறது. இதனால் மாநகர் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து, சென்னை வெள்ளக்காடாய் போனது.

சென்னை அசோக் நகர் 18-வது அவென்யூவில், சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிலிருந்து மின்சாரம் குடிநீர் இன்றி குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரும் அவதியுற்று வருகின்றனர். 

a1

கீழ்தளத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ள நிலையில், சாலையில் இடுப்புக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால், அத்தியவாசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.  இதுவரை எந்த அரசு உதவியோ அதிகாரிகளின் நடவடிக்கையோ எடுக்காதது கவலையளிப்பதாக சொல்கின்றனர். 

வீடுகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றவும், பகுதிவாசிகளுக்கு உணவு குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை விரைந்து அளிக்கவும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். மேலும், GST சாலையை ஒட்டிய சாலை என்பதால் 100 அடி ஹாட் சிப்ஸ் முதல் லஷ்மன் ஷ்ருதி வரை பெய்யும்  அனைத்து மழை நீரும், இங்கே தேங்குவதாக அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர். 

சில மணி நேரம் மட்டுமே பம்ப் செய்து என்ஜின் சூடாகி விட்டது என மாலை வந்த பம்பிங் லாரி திரும்பி சென்று விட்டதாகவும், அரசு ஒப்பந்த ஊழியர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும், அங்கு வசிக்கும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

a2

இதேபோல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லேக் அவென்யூ பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஸ்கூல் ரோடு மழை நீர் சூழ்ந்து ஏரி போல காட்சி அளிக்கிறது. சென்னை திருவொற்றியூர் வெற்றி நகர், பாலாஜி நகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் இன்னும் வடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதற்கிடையில், சென்னை கொளத்தூர் செல்வி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வீடுகளுக்குள்ளும் எட்டிபார்த்து இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பரிதவித்து போயிருக்கிறார்கள். வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இதேபோல மந்தைவெளி, கே.கே.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு போன்ற வட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களுக்கு பெரும் துயரை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் தொடங்கிய மழை நேற்று முன்தினம் விடிய விடிய கொட்டியது. அதன் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாயுள்ளதால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும், மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாளை வியாழக்கிழமை, சில இடங்களில் அதி கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்ற எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விடுத்துள்ளனர்.