வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததை அடுத்து, தற்போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியை கொண்டது. இந்த அணையில் இருந்து சுமார் 32 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமங்களுக்,கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 58-ம் கால்வாய் திட்டம் துவக்கப்பட்டது. வைகை அணை நீர் மட்டம் 67 அடி உயரும்போது, 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் வெளியேறும்படி மதகு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி, மே, ஜூலையில் வைகை அணை நீர் மட்டம் 67 அடியை கடந்தது. ஆனால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் தொடர்ந்து வெளியேறியதால், நீர்மட்டம் 66 அடிக்கும் கீழே சென்றது. இதனால் 58-ம் கால்வாயில் நீர் திறக்க வாய்ப்பு இல்லாமல் போனது.

ஆனால் தற்போது தேனி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்த மழை காரணமாகவும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கூடுதல் தண்ணீர் காரணமாகவும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

v1

நேற்று முன்தினம் அணையின் நீர் மட்டம் 67 அடியை எட்டிய நிலையில், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை அணையின் நீர் மட்டம் 68.50 அடியாக உயர்ந்தது.

இதனையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2753 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு 500 கன அடி, மதுரை குடிநீர் தேவைக்காக 69 கன அடி என மொத்தம் 569 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5421 மில்லியன் கன அடியாக உள்ளது.

அணையின் நீர் மட்டம் 69 அடியை தொட்டவுடன் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆற்றில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பவோ வேண்டாம் என தண்டோரா மூலமும் ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். மேலும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்க வைக்க போதுமான ஏற்பாடுகளையும், பேரிடர் மீட்பு தகவல்களை தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளனர். 

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென்மாவட்டங்களில் வைகை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

v3

அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்த உடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றும் நடவடிக்கைகளில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.

தற்போது வைகை அணையில் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளதால் 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 110 கிராமங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரால், 33 கண்மாய்கள் நிரம்பும் என்றும், இதன் மூலம் நிலத்தடி நீரும் உயரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.