“அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக” சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆம் நாளாக மழை பாதிப்புகளை ஆய்வு செய்தபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் பெரும்பாலன மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த 6 ஆம் தேதி இரவு தொடங்கிய கனமழையானது, விடிய விடிய 3 வது நாளாக கொட்டி தீர்த்தது. 

இதனால், முதல் நாளில் அதுவும் ஒரே நாளில் பெய்த கன மழையால் சென்னை நகரமே மழை நீரில் சூழ்ந்து, பல வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துகொண்டது.

அத்துடன், மழை நீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகளிலும், தண்ணீர் சூழ்ந்து, போக்குவரத்து முற்றிலும் முடங்கும் வகையில் அமைந்துபோனது. 

இவற்றுடன், சென்னையில் திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட மண்டலங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால், அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை அப்படியே பாதிக்கப்பட்டு உள்ளது.

கொரட்டூர், கொளத்தூர், புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம்  உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் இன்னும் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் தான், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 3 ஆம் நாளாக மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண பொருட்களை வழங்கினார். 

அத்துடன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாமையும் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெறப்பட்டு உள்ளதாக” பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், “கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும், மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை” என்றும், முதலமைச்சர் கவலைத் தெரிவித்தார்.

குறிப்பாக, “முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது புகார் எழுந்து உள்ளது என்றும், தற்போது சமாளித்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்” மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

“எனினும், ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நிச்சயமாக, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெளிப்படையாகவே தெரிவித்தார்.

இதனால், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற மற்றும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வர உள்ளதால், அதிமுகவினர் பீதியில் உரைந்துள்ளனர்.