அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உள்பட 9 பேர் கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நாளைய தினம் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு நேற்று மாலை வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இதனையடுத்து, நாளைய தினம் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தான், “கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக கூறியும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, வலியுறுத்தியும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை முதல் வந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதிமுகவினரின் தர்ணா போராட்டம் காரணமாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் காலை முதல் பரபரப்பாக கணப்பட்டது.

இந்த தர்ணா போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கோவை கலவர பூமியாக மாற்றப்பட்டிருக்கிறது” என்று, அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

அத்துடன், “ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள், ரவுடிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர் என்றும், அவர்கள் அதிமுகவினரை தாக்குகின்றனர்” என்றும், புதிய குண்டை தூக்கி போட்டார்.

மேலும், “பொது மக்களை அவர்கள் மிரட்டுகின்றார்கள் என்றும், இதற்கெல்லாம் தமிகழ காவல் துறையும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளது” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“தமிழக காவல் துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று, நாங்கள் பலமுறை மனு கொடுத்து விட்டோம் என்றும், ஆனால் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் தொடர்ந்து போடப்படுகிறது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார்.

முக்கியமாக, “இதே நிலை நீடித்தால், நாளை வாக்குபெட்டியை கூட அவர்கள் தூக்குவார்கள் என்றும், இதனால் வெளியூர் குண்டர்களை காவல் துறை வெளியேற்ற வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார். 

“தேர்தல் முறை கேட்டில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைடிபற்ற இந்த தொடர் போராட்டம் நீடித்து வந்த நிலையில், போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனாலும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இந்த போராட்டத்தை கைவிட மறுத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, போலீசார் வேலுமணி உள்பட அதிமுக எம்எல்ஏக்களை அதிரடியாக கைது செய்தனர். 

அப்போது, அங்கு 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நிகழ்விடத்தில் இருந்ததால், போலீசாருக்கும் - அதிமுகவினருக்கும் இடையே சற்று தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

குறிப்பாக, போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை கைது செய்ய வந்த போது, அவர் தரையில் படுத்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அதிமுகவினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். இதனால், அதிமுகவினர் மத்தியில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.