தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் வெள்ளநீர் வடியாததால் சாலைகளில் குளம்போல காட்சியளிக்கின்றன. 

இந்நிலையில் நேற்று மேலும் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் இன்று  குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதனை தொடர்ந்து  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் தேனி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்பு உள்ளது. 
அதேபோல், புதுச்சேரியிலும் அடுத்த 2 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்தசூழலில் தமிழகத்தில் டிசம்பர் 3-ந்தேதி வரையில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,தேனி,நெல்லை,திண்டுக்கல்,கடலூர்,ராமநாதபுரம்,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருவள்ளூர், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை பொன்ற மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றே இன்று விடுமுறை என்று அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.