தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்ப்பார்த்தை விட கனமழை பெய்ததால், சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளநீரில் தத்தளித்தன.

ஒரே மாதத்தில் கடந்த 9-ம் தேதி மற்றும் 13-ம் தேதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், மதுரை மாவட்டத்தை தவிர 29 மாவட்டங்களில் இயல்பை தாண்டி மழை பெய்துள்ளது.

இதற்கிடையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாமல் தாமதமானது. 

எனினும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Weather report Chennai IMD

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. மேலும் தமிழகத்தில் டிசம்பர் 3-ந்தேதி வரையில் மழை நீடிக்கும் என்று வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நேரத்தில், தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.   இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்  கூறியதாவது;- 

‘தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

weather report chennai imd

மேற்கு, வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும். தாழ்வு மண்டலம் புதிய புயலாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வங்கக்கடல் பகுதியில் புதிய புயலாக உருவெடுக்கும். புயல் சின்னம், தெற்கு ஆந்திரா, வடக்கு ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு இல்லை.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும். நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அடுத்த சில நாட்களில் இது சூறாவளிப் புயலாக வலுபெறும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என வானிலை மையம் கூறியுள்ளது.