தமிழகத்தில் கனமழை கொட்டி வரும் நிலையிலும் திருவண்ணாமலை தீபம் 11 நாட்கள் பிரகாசமாக காட்சியளித்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 10 நாட்களும் பஞ்சமூர்த்திகள் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடந்த 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. 

தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியின் மீது மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டு வந்தது. குறிப்பாக இந்த வருடம் தொடர் மழையிலும் மகாதீபம் மலை உச்சி மீது தொடர்ந்து எரிந்து கொண்டு வந்தது என்பது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

maha deepam1

இந்நிலையில் நிறைவு நாளான நேற்று மகாதீபம் 2,668 அடி உயரமுள்ள மலை மீது ஏற்றப்பட்டது. நிறைவு நாள் என்பதால் ஆன்மீக பக்தர்கள் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றி மலையின் மீது ஜோதிப் பிழம்பாய் காட்சி கொடுத்த அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆண்டுக்கான மகா தீபம் இன்று அதிகாலையுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மலை உச்சியிலிருந்து மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரும் பணி நடப்பது வழக்கம் அதன்படி இன்று காலை மலை மீது இருந்து கோயிலுக்கு தீப கொப்பரை கீழே வர வைக்கப்பட்டு பின்பு மாலை கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். 

அதன் பின்னர் கொப்பரையில் உள்ள  தீபமை ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜப்பெருமானுக்கு சாற்றவிட்டு பின் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும். கடந்த 19-ம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாள் பிரகாசித்தது. 

maha deepam2

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுமார் 35 கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரியும். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள அதுல்யநாதர் கோயில் மலையில் இருந்து பார்த்தால் இந்த மகா தீபம் நன்றாகத் தெரியும் என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 

மகா தீபம் பிரகாசமாக எரிய தினமும் 300 கிலோ முதல் 375 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி, 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து 11 நாள்களுக்கும் நெய், திரி, கற்பூரத்தைப் பயப்டுத்தி தீபம் எரிய வைக்கப்படுகிறது.