“ஆசிரியர்களுக்கு தொந்தரவாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடியாக பேசினார்.

அதாவது, கல்வியை கற்றுத் தரும் ஆசிரியர்களை அவமானப்படுத்தும் வகையில், மாணவர்கள் சிலர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. 

அதுவும், பள்ளி முடிந்த பிறகு, பள்ளி வளாகத்தில் நுழைந்து கட்டிடங்களை சேதப்படுத்துவது, ஆபாச வார்த்தைகள் எழுதுவது என ஒழுங்கீனத்தில் சில மாணவர்கள் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து உள்ள மஞ்சினி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் “புள்ளிங்கோ ஸ்டைலில்” தலைமுடி வெட்டாமல் பள்ளிக்கு வந்த நிலையில், தலைமுடி வெட்டாமல் பள்ளிக்கு வந்த அந்த மாணவனை, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த மாணவனை அழைத்து கண்டித்து உள்ளார்.

அத்துடன், “நாளை வரும் பொழுது, முறையாக தலைமுடியை வெட்டிவிட்டு வரும் படியும்” அந்த தலைமை ஆசிரியர் கூறியிருக்கிறார். இதனால், அந்த புள்ளிங்கோ மாணவன், அந்த தலைமை ஆசிரியருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறான்.

முக்கியமாக, அந்த புள்ளிங்கோ ஸ்டைல் மாணவன், சம்மந்தப்பட்ட அந்த ஆசிரியரை பீர் பாட்டிலால் பாய்ந்து தாக்க முயன்றிருக்கிறார். இது, கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அதே போல், கடந்த ஏப்ரல் மாதம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பள்ளியின் ஆசிரியரை, அதே பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் அடிக்க பாய்ந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பீதியையும் ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் தான், இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக இன்றைய தினம் தமிழக சட்டப் பேரவையில் விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது” என்று, கண்டிப்புடன் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது” என்றும், வலியுறுத்தினார்.

குறிப்பாக “ஆசிரியர்களுக்கு தொந்தரவாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், சம்மந்தப்பட்ட மாணவர்களின் TC யிலும், அவர்களது Conduct Certificate லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” என்றும், அதிரடியாக குறித்து உள்ளார்.

மேலும், “மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திய பிறகு மாணவர்களுக்கு அதன் பிறகு பாடங்கள் நடத்தப்படும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடியாக பேசினார்.