தென்னிந்திய திரை உலக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் நடிகை சாய் பல்லவி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் விரட்ட பர்வம். தெலுங்கில் சாய்பல்லவி மற்றும் ராணா இணைந்து நடித்திருக்கும் விரட்ட பர்வம் திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்து வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சாய்பல்லவி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

தமிழ் இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் தியா, தனுஷின் மாரி 2, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த NGK உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி நடிப்பில் அடுத்ததாக தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள திரைப்படம் கார்கி.

இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள கார்கி திரைப்படத்தை ப்ளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் ப்ரொடக்ஸன்ஸ் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ஷ்ரயான்தி ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

கார்கி திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கான டப்பிக்கையும் சாய்பல்லவி தன் குரலில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திரைக்கு வரவுள்ள கார்கி திரைப்படத்தின் முன்னோட்டமாக புதிய Glimpse வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…