சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் பக்கிங்காம் கால்வாய் நீர்நிலையை ஆக்கிரமித்து, பல பத்தாண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜிவ் ராய் என்கிற கட்டுமான தொழிலதிபர் இளங்கோ தெரு அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ள நிலையில், இளங்கோ தெருவில் குடியிருக்கும் அனைவரும் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து உள்ளதாக நீதி மன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பல ஆண்டுகளாக இடிக்கப்படாமல் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை கடந்த சில நாட்களாக பொதுப்பணி துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர்.

இதனால் ஏற்கனவே முதல் கட்டமாக 130 வீடுகள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் அவர்களுக்கு மறுகுடியமர்வுக்காக பெரும்பாக்கம், எழில் நகர், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வழங்கியிருந்தனர். ஆனால் அந்த வீடுகள் எதுவும் சரியான பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடுடோடு இருப்பதாகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அந்த பகுதி சரியாக இல்லை எனவும் கூறி இளங்கோ தெரு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் அங்கு இளங்கோ தெரு பகுதியில் மீதமுள்ள வீடுகளை அகற்ற நேற்று காலை 8 மணி முதலே பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து ஜேசிபி வாகனம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தங்களுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் மோசமான நிலையில் சுகாதார சீர்கேடுகளோடு இருப்பதாகவும் தங்கள் வாழ்வாதாரம் சென்னையின் மையத்தில் இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் தங்களை குடியமர்த்தினால் தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மக்கள் கேள்வி எழுப்பி அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து இதனால் அதிகாரிகளுக்கும் இளங்கோ தெரு மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் வி.ஜி கண்ணையா என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஆக்கிரமிப்பிற்கு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென தீ வைத்து கொண்டார். உடனடியாக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் கண்ணையன் உயிரிழந்தார்.  பாமக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக கண்ணையன் இருந்துவந்துள்ளார். அவரது இறப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது: ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். ஆக்கிரம்பிப்புகளை அகற்றும் விவகாரத்தில் ஆர்.ஏ புரம் உயிரிழப்பே கடைசியாக இருக்க வேண்டும். மந்தவெளி, மயிலாப்பூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் கட்டி வரும் வீடுகளில், ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவர்.

மேலும் வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய தேவை ஏற்படின், மறு குடியேற்றம் தொடர்பாக முன்கூட்டியே சம்மந்தப்பட்ட மக்களுடன் கலந்தாலோசித்து, மறு குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மறு குடியமர்வு கொள்கை விரிவாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.