தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

protest

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள். ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், செல்போன் மற்றும் லேப்டாப் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.வ்பெரும்பாலும்  விடுதியில் தங்கி பணியாற்றி வரும் பெண்கள் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  பெண் ஊழியர்கள் தங்கி இருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சில பெண்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.  அவர்களின் நிலை குறித்து நிர்வாகத்திடம் சக ஊழியர்கள் கேள்வி எழுப்பியபோது மழுப்பலான பதில்களை தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகும் நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காததால் எட்டு நபர்கள் உயிரிழந்து இருப்பார்களா என்று சந்தேகம் எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விடுதியில் இருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் வெளியில் வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு 12 மணியளவில் திரண்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
  
மேலும் பெண்கள் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை-பெங்களூரு சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களை சமாதானப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.