மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழகுவது குறித்து  இந்த வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைக்கப்பட்டது.

 public health workers

அரசு துறையில் பணிபுரிந்து கொண்டு கத்தி மேல் நடப்பது போல உணர்ந்தவர்கள் மக்கள் நலப் பணியாளர்கள் தான். வழக்கமாக தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களே இதுபோன்றதொரு மனநிலையில் இருப்பார்கள். ஆனால் அரசு ஊழியர்களான மக்கள் நலப் பணியாளர்களுக்கே இந்த நிலையை உருவாக்கின முந்தைய அதிமுக அரசுகள். ஆட்சி எப்போது மாறும் எப்போது வேலை பறிபோகும் என்ற அச்சத்துடனே பணிசெய்து கொண்டிருந்தனர் அவர்கள். இதில் துக்கம் தாளாமல் 10-க்கும் மேற்பட்டோர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து 1989-ம் ஆண்டு வேலையில்லாதவர்களுக்கு அரசுப் பணி வழங்கும் நோக்கில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கிராம பஞ்சாயத்துகளில் தலா 2 ஊழியர்கள் என 25,234 பேரை மக்கள் நலப் பணியாளர்களாக நியமித்தார். ஆனால் 1991ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து வீட்டுக்கு அனுப்பியது. 1996இல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் மக்கள் நலப் பணியாளர்கள் தூக்கி பந்தாடப்பட்டனர். 2009ஆம் ஆண்டு தொகுப்பூதியம் பெற்று வந்த மக்கள் நலப் பணியாளர்களை, சிறப்பு கால வரைமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வந்தனர். ஆனால் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்ததும், கிராம பஞ்சாயத்துக்களில் போதிய ஊழியர்கள் உள்ளனர் எனக்கூறி மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. இதனை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் முன்னேற்ற சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அரசின் உத்தரவை தனி நீதிபதி ரத்துசெய்ய, அரசு மேல் முறையீடு செய்தது. இருப்பினும் அதிமுக அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்தது.

மேலும் 2014ஆம் ஆண்டு வெளியான தீர்ப்பில், "வேலைவாய்ப்பு அளிப்பது தான், இத்திட்டம் கொண்டு வரப்பட்டதன் காரணம். ஆகவே மக்கள் நலப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது செல்லாது. அவர்களுக்கு அக்டோபருக்குள் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காதவர்களுக்கு, பணி வழங்கும் வரை, சம்பளம் வழங்க வேண்டும்" என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்தது.
இச்சூழலில் கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால் மக்கள் நலப் பணியாளர்களுக்குச் சாதகாமாக அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நினைத்தது போலவே இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் பதிலுரைத்த தமிழக அரசு, "மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு செய்து முன்மொழிவை அனுப்பி உள்ளது.

இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறையின் அந்த முன்மொழிவை பரிசீலனை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும். அந்த பரிசீலனை செய்யப்பட, இந்த வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்மூலம் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படவுள்ளது என்ற நம்பிக்கை மக்கள் நலப் பணியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தந்தை உருவாக்கிய திட்டத்தையும் மக்கள் நலப் பணியாளர்களையும் காப்பாற்ற அவரது தனயன் முயற்சி செய்துவருவது தெளிவாக தெரிகிறது.