“நீட் விலக்கு மசோதாவை, தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழ் மக்களுக்கு எதிரானது” என்று, பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சித்து உள்ளார். 

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழ் மக்களுக்கு எதிரானது என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான சட்ட முன்வடிவினை ஆளுநர் ரவிக்கு, தமிழக அரசு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதனை தமிழக ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பினார். 

அதன் தொடர்ச்சியாக, தமிழக ஆளுநர் ரவியின் இந்த நடவடிக்கையால், கடும் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு, “அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்ய” தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் கூடி முடிவு செய்தது.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டமானது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், “அடுத்து என்னமாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது குறித்து முடிவு செய்ய, சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தி ஆலோசிக்க” அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன் படி, வரும் 8 ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட, வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

முக்கியமாக, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் நேற்றைய தினம் முடிவு செய்யப்பட்டது.

அப்போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை தமிழக ஆளுநர் சரியாக செய்யவில்லை” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

அதே போல், தமிழக அரசியல் கட்சிகள் யாவும் கடந்த 3 நாட்களாக தமிழக ஆளுர் ரவிக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருவதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆளுநரின் இந்த செயல் தொடர்பாகவும், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாகவும் ஒவ்வொருவராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், “இளைஞர்கள் பார்வையில் வடசென்னை” என்ற தலைப்பில், சென்னையில் புகைப்பட கண்காட்சி ஒன்று நடைபெற்றது. 

இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித், “வட சென்னையை அழுக்கான, அதிகமான மக்கள் இருக்கும் இடமாகவே நாம் பார்த்திருப்போம். ஆனால், என் பார்வையில் வட சென்னை மிகவும் அழகான பகுதி” என்று, குறிப்பிட்டார். 

“வட சென்னை மக்களுக்கு எதிரான மத்திய அரசின் போக்குகளையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் அழகியலுடன் காட்சிப்படுத்தி உள்ளனர்” என்றும், அவர் கூறினார்.

“நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது” குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நீட் மசோதா குறித்த ஆளுநரின் செயல்பாடு மிகவும் தவறானது” என்று சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, “தமிழ் மக்கள் விரும்புகின்ற உணர்வை, திருப்பி அனுப்புவது என்பது முற்றிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது” என்றும், இயக்குநர் பா.ரஞ்சித், தனது தருப்பு கருத்து பதிவு செய்தார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் இந்த பேட்டி, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.