தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் நேற்றைய தினம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்ட பேரவையில் தாக்கல் செய்கிறார். அந்த வகையில், இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்கும் போது, இந்த பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கடும் கூச்சலிட்டபடியே வெளிநடப்பு செய்தனர்.

இப்படியாக, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே தான், நேற்றைய தினம் பட்ஜெட்டை தாக்கல் செய்ப்பட்டது.

அதன்படி, பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்த நிலையில், “மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையால் 20,000 கோடி ரூபாயாக இழப்பு ஏற்படும் என்றும், முறையான நிதி பகிர்வை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை” என்கிற குற்றச்சாட்டையும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன் வைத்தார்.

அதில் குறிப்பிடும் படியாக, 

- ஒன்றிய, மாநில நிதி உறவுகளை வழிநடத்த சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

- சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டது.

- தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவை பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும்  கடைசி மூச்சு இருக்கும் வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட  5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- தமிழக பட்ஜெட்டில் காவல் துறைக்கு 10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

- பள்ளிக் கல்வி துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- குறிப்பாக, குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல்; வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யபட்டதுடன், டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு 80 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த அறிப்புகள் யாவும், தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தான், “தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 19 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறுவதாக” சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

அதன் படி, இன்றைய தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

இந்த வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். 

மிக முக்கியமாக, திமுக ஆட்சியில் தான் வேளாண்மைக்கு என்று, தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, 20 ஆம் தேதியான நாளை தினம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, “21, 22, 23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும், 24 ஆம் தேதி மானியக் கோரிக்கை மற்றும் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் பதிலுரை அளிப்பார்கள்” என்றும், சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.