பச்சிளம் குழந்தையை பள்ளியில் சேர்ந்த முதல் நாளே, பள்ளி வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தான் இப்படி ஒரு சோக நிகழ்வு நடந்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்து உள்ள ஆரணி கொருக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி - ராணி தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ், சர்வேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதியினர், அந்த பகுதியில் நெசவு தொழிலாளியாக இருந்து வருகின்றனர்.

அத்துடன், இரு மகன்களில் 4 வயதான சர்வேஷ் என்ற மகனை, ஆரணி அருகே உள்ள வாழைபந்தல் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பள்ளியில் சேர்க்க LKG வகுப்பில் அட்மிஷன் சேர்த்திருந்தனர்.

அதன்படி, நேற்றைய தினம் பௌர்ணமி நாள் என்பதால் 4 வயதான சர்வேஷை, அந்த பள்ளியில் முதல் நாளாக பள்ளியில் சேர்த்து விட்டு உள்ளனர்.

தொடர்ந்து, 4 வயதான சிறுவன் சர்வேஷிடம் “பள்ளியில் அமர்ந்து படிக்குமாறும், மாலையில் பள்ளி விடும் நேரத்தில் வந்து மீண்டும் அழைத்துச் செல்வதாகவும்” கூறிவிட்டு அவரது தாயார், தனது மகனுக்கு ஆசையாக டாட்டா காட்டிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில் தான், மாலை வேளையில் பள்ளி முடிந்து பள்ளி பேருந்து வாகனத்தில் அந்த 4 வயது சிறுவன் சர்வேஷ், வீடு திரும்பி உள்ளான்.

முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்த சர்வேஷ், தனது தாயை காணும் சந்தோஷத்தில், பள்ளி பேருந்தை விட்டு கீழே இறங்குவதற்காக பள்ளி வாகனத்தை விட்டு இறங்க முற்பட்டுள்ளான். அப்போது, அந்த பேருந்தில் சிறு குழந்தைகளை கீழே இறக்கிவிட யாரும் இல்லாததால், அந்த சிறுவன் தனது புத்தகப் பையை மாட்டிக் கொண்டு இறங்க ஆயத்தமான நிலையில், தட்டு தடுமாறியிருக்கிறான்.

அப்போது, அந்த சிறுவன் பேள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கினாரா என்பதை கூட சரியாக கவனிக்காத அந்த வாகனத்தின் டிரைவர், 4 வயது சிறுவன் சர்வேஷ் பேருந்தை விட்டு கீழே இறங்குவதற்கு உள்ளாகவே அந்த பேருந்தை மீண்டும் இயக்கி உள்ளதாகவும் தெரிகிறது. 

இதனால், அந்த 4 வயது குழந்தையின் ஒரு கால் பேருந்திலும், மற்றொரு கால் தரையிலும் இருந்த நிலையில், அந்த பச்சிளம் குழந்தை பேருந்தில் இருந்து தலைகுப்புற விழுந்திருக்கிறான்.

அந்த பச்சிளம் குழந்தை சர்வேஷ் கீழே விழுந்த வேகத்தில், அந்த வாகனத்தின் முன் சக்கரத்தில் சிக்கியதுடன் பின் சக்கரமும் அந்த பச்சிளம் குழந்தை மீது ஏறி இறங்கி உள்ளது. 

இதில், அந்த சம்பவ இடத்திலேயே அந்த 4 வயது குழுந்தை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்து உள்ளது. 

இதனை கவனித்த அப்பகுதி மக்கள், ஓடி வந்து சிறுவனை தூக்கி பார்த்து உள்ளனர். அப்போது, அந்த குழந்தையின் தலை நசுங்கி இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

அத்துடன், அந்த பேருந்தின் டிரைவரை அந்த மக்கள் கடுமையாக திட்டியதுடன், அவரை பிடித்து வைத்துக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டதுடன், அந்த வேன் டிரைவரையும்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், அந்த தனியார் பேருந்தில் குழந்தைகளை ஏற்றி இறக்க உதவியாளர்கள் யாரும் இல்லாததால், இந்த கோர விபத்து நடந்திருப்பதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதே நேரத்தில், குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளி செல்லும் வாகனங்களை இயக்குபவர்கள், இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், அப்படியான வாகனங்களில் குழந்தைகளை கவனித்துக்கொள்ள உதவியாளர்கள் இருக்க வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொது மக்களின் இந்த கோரிக்கையை, பள்ளி நிர்வாகமும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களும் கவனமுடன் இருக்க வேண்டும் என்பது காலம் நமக்கு உணர்த்தும் உண்மைகளே!