தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் அவர்கள் வில்லன், குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என பலவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். கடைசியாக சத்யராஜ் நடிப்பில் தீர்ப்புகள் விற்கப்படும் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் அடுத்ததாக ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில், மாயா மற்றும் கேம் ஓவர் படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் கனெக்ட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சத்யராஜ் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சத்யராஜ் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என அவரது மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 

மக்களே அப்பா நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்… முற்றிலும் குணமடைந்து நன்றாக இருக்கிறார்! சில தினங்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தனது பணிகளைத் தொடருவார்… உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்! 

என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள், சானிடைசர் பயன்படுத்துங்கள், கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.