“சென்னை கோயம்பேடு மார்க்கெட் இனி மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும்” என்று, கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நேற்று முன் தினம் முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பான உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த நிலையில், “இந்த கொரோனா ஊரடங்கிற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றும், கேட்டுக்கொண்டார்.

அதன்படி, இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

அதன் படி, “8 ஆம் தேதியான இன்று முதல் அதிகாலை ஒரு மணி முதல் மதியம் ஒரு மணிவரை மட்டும் கோயம்பேடு வணிக வளாக மார்க்கெட் இயங்கும்” என்று, கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் அறிவித்து உள்ளது.

இது குறித்து கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை” அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால், தமிழக அரசின் ஆணைக்கிணங்க CMDA MMC நிர்வாக அவர்களின் அறிவுறுத்தலின் படி அனைத்து வியாபாரிகளும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்றும், அறிவுறுத்தி உள்ளது. 

மேலும், “முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும், கைகளை அடிக்கடி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்றும், கூறியுள்ளது.

“சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், நோய் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்றும், தெரிவித்து உள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் கொரோனா 3 வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமை முழு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்கி செல்ல ஏராளமான பொது மக்கள் தற்போது ஒரே நேரத்தில் அங்கு குவிந்துள்ளனர். இதனால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அதிக அளவிலான மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து வருகிறது.

எனினும், “சமூக இடைவெளியை கடைபிடித்து மீன் வாங்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசங்கள் அணியவும்” மீனவர் சங்கத்தினர், அங்கு ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள். இதனால், காசிமேடு மீன்பிடி துறைமுகம் தற்போது பரபரப்பான சூழலில் காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.