திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

நடந்து முடிந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்து உள்ளது. 

இதன் மூலமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பவர், முறைப்படி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி அக்கட்சியின் சட்டமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதி. அதன் பிறகே, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்பது இந்திய சட்டமன்றத்தின் நடைமுறையாக இருக்கிறது.

அதன் படி, தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் 125 திமுக எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அத்துடன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் பங்கேற்றனர். அந்த வகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 133 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது, சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர்.

அதனைத்தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்திட, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழி மொழிந்திட சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

அதனைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், சட்டமன்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்து கையெழுத்திட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்னும் சற்று நேரத்தில் செல்ல இருக்கிறார். 

அங்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார்.

அதன் படி, வருகிற 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஆளுநர் மாளிகை வளாகத்திலேயே மிகவும் எளிமையான முறையில் இந்த பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.