கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடனான  பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 


இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, " கொரோனா முதலாவது அலையின்போது, இந்தியாவின் வெற்றிக்கு மிகப் பெரிய அடிப்படையாக இருந்தது, நமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் யுக்திகள்தான். அதேபோல், இந்த சவாலையும் தீர்க்க வேண்டும். அதே போல் இந்த இரண்டாவது அலையையும் நாம் கடக்க வேண்டும். பல மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. நாம் கூட்டு சக்தியுடன் தொற்றை எதிர்த்து போராட வேண்டும். 


ஒரே நாடு என்ற உணர்வுடன் நாம் பணியாற்றினால், வளங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது. ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் பதுக்கப்படுகிறதா, கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறதா என்பதை மாநிலங்கள் சோதனை செய்ய வேண்டும். எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆக்சிஜன் டேங்கர் லாரிகளும், தடுத்த நிறுத்தப்படக்கூடாது என்பதை ஒவ்வொரு மாநிலமும் உறுதி செய்ய வேண்டும். 


ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்கள் இணைந்து செயல்படுகின்றன. தொழிற்சாலை ஆக்சிஜன்களும், அவசர தேவையை எதிர்கொள்ள மாற்றிவிடப்படுகின்றன. 


நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதுடன், மருத்தவமனைகளின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். சமீபத்தில் நடந்த ஆக்சிஜன் கசிவு, மருத்துவமனைகளில் நடந்த தீ விபத்து சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மருத்துவமனையின் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாடு முழுவதும் கோவிட் தொற்றின் இரண்டாவது அலையையும், நம்மால் தடுத்து நிறுத்த முடியும்” என்று பேசினார்