“ஊர்ல நடக்கிற எல்லா "லவ் மேரேஜு"க்கும் நாங்க தான் பொறுப்பா?” என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் அவ்வப்போது, காதல் திருமணங்கள், சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் காதல் சார்ந்த வன்முறை சம்பங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருக்கின்றன. இப்படியான வன்முறை சம்பங்களுக்குப் பின்னாடி சாதி மற்றும் அரசியல் பின்புலம் இருப்பதும் அவ்வப்போது செய்திகள் வெளியாகிக்கொண்டும் இருக்கின்றன.

இப்படியான நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “தேர்தலை அடுத்து, சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட, இந்த அரக்கோணம் இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் விசிக வலியுறுத்துகிறது” என்று, குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் பெறாமல், சௌந்தரராஜன் கொடுத்த வாக்குமூலத்தை மட்டுமே ஒரு புகாராக எடுத்துக் கொண்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், அதிலும் அந்த நபர் சொன்னதை முழுமையாக முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்வதைத் தொடக்கத்தில் இருந்தே காவல் துறை ஒரு சார்பிலான உள்நோக்கத்தோடு தொடர்ச்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 

“போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு முகாந்திரம் இல்லை என்ற ஐயம் எழுகிறது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார்.

மேலும், “புலனாய்வு, விசாரணை தொடங்காமலேயே, குடித்து விட்டு இருதரப்பினர் இடையே வாக்குவாதம் செய்ததால் ஏற்பட்ட மோதல், அதனால் இந்த 2 பேர் உயிரிழக்க நேர்ந்தது என்று போலீசார் முன்கூட்டியே கருத்துச் சொன்னது, விசாரணைக்கு எதிராக அமைந்து விட்டது” என்றும், திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.

“எனினும், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரிப்பதில் நியாயம் கிடைக்காது என்றும், நீதி கிடைக்காது” என்றும், அவர் வருத்தம் தெரிவித்தார். 

“இந்த இரட்டைக் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்து வருகிறோம் என்றும், இந்த தேர்தலை ஒட்டி ஏற்பட்ட முரண்பாடு பதற்றம் என்ற அடிப்படையிலேயே, சாதி வெறியர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை செய்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை அறியும் குழுவினர் சொல்லும் உண்மையான அறிக்கை” என்றும், திருமாவளவன் கூறினார்.

அதே போல், “ சாதாரண வாய்த்தகராறு அதற்கு சமாதானம் பேச வேண்டும் என்கிற சூழ்நிலை இல்லாத நிலையில், சமாதானமாகப் பேசி கொள்வோம் என்று அர்ஜுன் சூர்யா தரப்பிற்கு தகவல் கொடுத்து அழைத்தது பெருமாள்ராஜ் பேட்டையை சேர்ந்த பாமக செயலாளர் மகன், ஐயப்பனையும் வம்புக்கு இழுத்து அவர்கள் தான் முதலில் தாக்கி இருக்கிறார்கள் என்றும், ஆனால் அடிவாங்கிய இளைஞர்கள் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அதே நேரத்தில், “இவர்களே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு 'பிரச்சனை வேண்டாம், சமாதானம் செய்து கொள்வோம். நேரில் வாருங்கள்' என்று அழைத்துவிட்டு, அடி ஆட்களைத் திரட்டி வந்த வேகத்தில் கத்தியால் குத்திவிட்டு 2 பேரை அவர்கள் படுகொலை செய்துள்ளார்கள் என்றும், இது திட்டமிட்ட சாதிய படுகொலை” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 

“இவற்றுடன், விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடவடிக்கையும் ஒரு காரணமாக அமைந்து உள்ளது” என்றும், திருமாவளவன் சுட்டிக்காட்டி உள்ளார்.

“ஆனால், இவற்றை எல்லாம் மூடி மறைக்கும் விதமாக, சிலர் திசை திருப்ப நினைக்கிறார்கள் என்றும், குற்றப் புலனாய்வு விசாரணைக்கு எதிராக அமையும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றும், இதனால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி இந்த மாதிரியான இழப்புகளை ஏற்படுகிறபோது, அவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதோடு, அவர்கள் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியான பாதிப்பிற்கு உள்ளாக கூடாது என்ற அடிப்படையில், தலா 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என சட்டம் கூறுகிறது” என்பதையும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

குறிப்பாக, “தமிழ்நாட்டை பொறுத்தவரை, இது வரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிலம் வழங்கியதில்லை என்றும், சட்டப்படி வழங்கும் நிதியைக் கூட உடனே தருவதில்லை என்றும், அதற்குப் போராட வேண்டி இருக்கிறது என்றும், தொடர்ந்து வற்புறுத்த வேண்டியிருக்கிறது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார். 

“இப்படியாக, ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் முதலமைச்சருக்கு கூட அக்கறை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் தற்போது உள்ளது என்றும், எனவே, ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை சாதிய வன்கொடுமை பிரதேசம் என்று அறிவிக்க வேண்டும்” என்றும், திருமாவளவன் வலியுறுத்தினார்.

மிக முக்கியமாக, “பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாம் திசைதிருப்பும் வகையில் சாதிய பிரச்சினைகளை ஒருமை படுத்திக் கூறி வருகிறார் என்றும், தயானந்த கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்கிற இளம்பெண், காதலின் பெயரால் கொடூரமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார் என்றும், அந்த கொலையையும் இந்த சொந்த சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் இழப்பையும் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்கு ராமதாஸ் பயன்படுத்துகிறார் என்றும், இப்படியான ஒரு அருவெறுப்பான அநாகரிகமான அரசியலில் ராமதாஸ் கையில் எடுக்கிறார்” என்றும், திருமாவளவன் வெளிப்படையாகவே விமர்சித்து உள்ளார்.

மேலும், “தமிழகத்தில் நடக்கும் காதல் திருமணங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட நபர் எப்படி பொறுப்பாக முடியும்?” என்றும், திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, “விடுதலை சிறுத்தைகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்றும், சட்டப்படி அதனை எதிர்கொள்வோம் என்றும், அவர் மீது விரைவில் அவதூறு வழக்குத் தொடுக்க உரிய ஏற்பாடுகளைச் செய்வோம்” என்றும், திருமாவளவன் தெரிவித்தார்.