தமிழ் திரையுலகில் நகைச்சுவை கலந்த ஹீரோயிசம் செய்யும் நடிகர் மிர்ச்சி சிவா. 12B படத்தில் துணை நடிகராக அறிமுகமான சிவா தற்போது அகில உலக சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். துவக்கத்தில் FM சேனல் ஒன்றில் ஆர் ஜேவாக பணியாற்றி வந்தவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து தமிழ் படம், கலகலப்பு, தில்லு முல்லு, யா யா, வணக்கம் சென்னை என பட்டையை கிளப்பினார். 

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சிவா நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் இடியட். சிவாவுக்கு  ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். லொள்ளு சபா புகழ் இயக்குனரான ராம்பாலா கடைசியாக தில்லுக்கு துட்டு 2 படத்தை இயக்கியிருந்தார். ராம்பாலாவும், மிர்ச்சி சிவாவும் இணைந்தால் நிச்சயம் திரையரங்கம் மகிழ்ச்சி மழையில் நனையும் என்றே கூறலாம். 

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதில் மிர்ச்சி சிவா மற்றும் நாயகி நிக்கி கல்ராணி பேயை கட்டையில் கட்டி தூக்கி கொண்டு செல்வது போல் இருந்தது. இதன் படப்பிடிப்பும் நடந்து முடிந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் இடியட் படத்தின் ட்ரைலர் வரும் ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் அறிவிப்பை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு காத்திருக்கும் படம் சுமோ. ஹோசிமின் இப்படத்தை இயக்கியுள்ளார். ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு, வி.டி.வி கணேஷ் ஆகியோருடன் சுமோ வீரர் Yoshinori Tashiro-ம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை ஜப்பானில் படமாக்கியுள்ளது படக்குழு. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.