தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். கடைசியாக இவர் நடிப்பில் வால்டர் திரைப்படம் வெளியானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

சமூக வலைத்தளத்தில் பிரபல நடிகர்கள், இயக்குனர்களின் பெயர்களை பயன்படுத்தி அவர்களின் படத்திற்கு ஹீரோயின் தேவை, துணை நடிகைகள் தேவை என்று இஷ்டத்திற்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் சிபி சத்யராஜின் புகைப்படத்தை போட்டு அவரின் படத்திற்கு 18 முதல் 28 வயது வரையிலான ஹீரோயின், தோழிகள், துணை நடிகைகள் கதாபாத்திரங்களுக்கு பெண்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் அருண் ப்ரொஜெக்ட் மேனேஜரை தொடர்பு கொள்ளவும் என்று போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதை பார்த்து பதறிப் போன சிபி அந்த போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,
நண்பர்களே, இந்த புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் வலம் வருவது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது பொய்யான தகவல். இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தயவு செய்து ஏமாந்துவிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். 

சிபி சத்யராஜ் கைவசம் ரேஞ்சர் படம் உள்ளது. ஜாக்சன் துரை பட இயக்குனர் தரணிதரன் இயக்கும் இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன் மற்றும் மதுஷாலினி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமூக வலைதளத்தில் பெண்களுக்கு இப்படி வலை விரிப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால், இயக்குனர் விஷ்ணு வர்தன், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் போன்றோர்களின் பெயரில் போலி அக்கௌன்ட் உருவாக்கப்பட்டது. அவர்களும் அதுகுறித்து எச்சரித்தனர். 

மேலும் பிரேமம் படம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனுக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டது. அவர் பெயரை சொல்லி ஒருவர் நடிகைகள் மற்றும் பெண்களுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அது பற்றி தெரிந்து கொண்ட அல்போன்ஸ் புத்ரன் சமூக வலைதளத்தில் ரசிகர்களை அலர்ட் செய்தார்.