தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம்.மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு நேர்ந்த கொடுமை நிறைந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக நெட்ஃபிளிக்ஸில் வெளியான நவரசா ஆன்தாலஜி வெப் சீரிஸில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கிட்டார் கம்பி மேலே நின்று எபிசோடில் சூர்யா நடித்தஇருந்தார்.

இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பில் நவரசத்தின் 9 உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக 9 எபிசோடுகள் அடங்கிய நவரசாவில் சூர்யா நடித்த கிட்டார் கம்பி மேலே நின்று எபிசோடின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ள கிட்டார் கம்பி மேலே நின்று எபிசோடில் இருந்து அவள் பறந்து போனாளே பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. யூ-டியூபில் வைரலாகி வரும் இந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.