அடுத்த சில மாதங்களுக்கு முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் எத்தனை அலைகள் வந்தாலும் எதிர்கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

corono

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நேற்று தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை டி.எம்.எஸ். வளாக தேசிய நல குழும கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

அதன் பின்னர் கண்ணியம் காக்க ஒன்றுபடுவோம்’ என்ற தொழுநோய் ஒழிப்பு தின மையக்கருத்தின் அடிப்படையில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஸ்பர்ஷ் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதையடுத்து ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா விஷயத்தில் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது. அம்மை, போலியோ நோயை ஒழித்தது போல சுகாதாரத்துறையின் அறிவுரைகளை பின்பற்றி, கொரோனாவையும் ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அடுத்த சில மாதங்களுக்கு முக கவசம் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றினால் எத்தனை அலைகள் வந்தாலும் எதிர்கொள்ள முடியும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தவரை மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் முதியோர், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது. சாதாரண பொதுமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான, 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 92 சதவீதம் பேர் இறப்பை சந்தித்து உள்ளனர். 3-வது அலை முதியவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக அதை போட்டுக்கொள்ள வேண்டும். சென்னையிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம் போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, தொழுநோய் விழிப்புணர்வு ஊர்தியை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொழுநோய் கண்டுபிடிப்பில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகளையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும்  சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் குருநாதன், துணை இயக்குனர் வே.தர்மலிங்கம், தமிழ்நாடு அரசு தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கூடுதல் இயக்குனர் டாக்டர் எஸ்.அமுதா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.