தெலுங்கு சினிமாவின்  முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும், ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும்  வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். முன்னதாக அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா The-Rise Part-1 திரைப்படம் கடந்த ஆண்டு  டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, நடிகர் ஃபகத் பாசில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். 

தெலுங்கு,தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ளது. மிர்ரோஸ்லா குபா ப்ரோஸ்கி ஒளிப்பதிவில், கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்ய, புஷ்பா திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

இந்தியா முழுக்க வெளிவந்த புஷ்பா திரைப்படம் பலகோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகாஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.  மேலும் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் புஷ்பா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின்போது சிட் ஸ்ரீராம் பாடலை அல்லு அர்ஜுன் ரசித்துக் கேட்கும் வீடியோ தற்போது வெளியானது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலை பிரபல பாடகர் சிட் ஸ்ரீராம் பாடியுள்ளார். ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பின்னணி இசை ஏதும் இல்லாமல் சிட் ஸ்ரீராம் பாடிய பாடலை ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆரவாரத்தோடு ரசித்தனர். அந்த வகையில் இந்த பாடலை ரசித்த நடிகர் அல்லு அர்ஜுன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை இணைத்து  பாடகர் சிட் ஸ்ரீராமை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “எனது சகோதரர் சிட் ஸ்ரீராம் அவர்கள் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீவள்ளி பாடலை மேடையில் பாடினார். எந்தப் பின்னணி இசையும் இல்லாமல் அவர் பாடத் தொடங்கினார். அவருடைய பாடலுக்கு துணையாக பின்னணி இசை கொடுப்பார்கள் என்று நான் காத்திருந்தேன். ஆனால் கொடுக்கவில்லை. அவர் தொடர்ந்து இசை இல்லாமல் பாடிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. அவருக்கு இசை தேவையில்லை அவர்தான் இசை”  என குறிப்பிட்டுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுனின் பதிவு மற்றும் வைரலாகும் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.