நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்த திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் பல மொழிகளிலும் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல்கள், நடிப்பு, படத்தொகுப்பு என அனைத்திலும் சிறந்த திரைப்படமாக ரசிக்கப்பட்ட சூரரைப்போற்று திரைப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது.  மாறா (எ) நெடுமாறன் ராஜாங்கம் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்த நிலையில் பாலிவுட் திரை உலகில் இருந்து இந்த கதாபாத்திரமத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏர்லிஃப்ட் & ஷெர்ரி உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான அபுடன்ட்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அக்ஷய்குமார் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.