இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 3-வது அலையின் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளோடு இயங்கி வருகின்றன. இதனால் இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ள முக்கியமான பெரிய திரைப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது.

குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் S.S.ராஜமௌலியின் RRR, பிரபாஸின் ராதே ஷ்யாம், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான் ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் வலிமை திரைப்படமும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

கோவிட் 19 பரவலின் 3-வது அலையில் 50 சதவிகித இருக்கைகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக வலிமை ரிலீஸ் தள்ளி போனது. இதனிடையே வலிமை படக்குழுவினர் இந்தியாவின் பல மொழிகளிலும் வெளியாக உள்ள வலிமை திரைப்படத்தை மற்ற பெரிய படங்களுக்கு முன் பிப்ரவரி இறுதியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Pan இந்தியா திரைப்படமாக 50 சதவிகித இருக்கைகளோடு வலிமை வெளியாகும் பட்சத்தில் திரைப்படத்தின் மீது உள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பின் காரணமாக கட்டாயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் அதன் ரிலீஸும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி பிப்ரவரி 18 அல்லது 25 என வதந்திகள் பரவி வரும் நிலையில் படக்குழுவினர் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை மார்ச் 11ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

எனவே இந்த தருணத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கும் தளர்த்தப்பட்டுள்ளதால் வலிமை படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் மற்ற பெரிய திரைப்படங்களுக்கு முன்பு அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.