இருளரின் வலியை ஒலிக்கும் ஜெய் பீம் 

சூர்யாவின்  2டி தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ் ,ரஜிஷா விஜயன் நடித்து Amazon primeல் வெளியாகியிருக்கும் படம் ஜெய் பீம். ஒரு உண்மை சம்பவத்தை மய்யமாக வைத்து இக்கதை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.  

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல்நிலையத்தில் ராஜாகண்ணு என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் கொல்லப்பட்டதையும், இதற்கு நீதி கேட்டு அவரது மனைவி பார்வதி  வழக்கறிஞர் சந்துரு நடத்தும் சட்டப்போராட்டம்தான் ஜெய் பீம்.

சூர்யா அத்தனை எதார்த்தமாக , படத்தின் தேவை மற்றும் அதில் தனக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்துள்ளார்.  உண்மையை நெஞ்சுக்கு நெருக்கமாகவும், அதே சமயத்தில் கதையின் விறுவிறுப்பு குறையாமலும் படம் நகர்கிறது குறிப்பாக இருளர் சமூகத்தின் வாழ்வியலை அவர்களின் பார்வையிலிருந்தே இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

jai bhim

இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ராஜாகண்ணு. செங்கல் சூளையில் வேலை, பாம்பு பிடித்து வனப் பகுதியில் விடுதல் என்று தன் குடும்பத்தை முன்னேற்ற எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறார். அவரின் மனைவி பார்வதி கணவன் மீது உயிராய் இருக்கிறார். கல் வீடு கட்டித் தருவதே தன் வாழ்நாள் லட்சியம் என்று மனைவியிடம் சொல்கிறார் ராஜாகண்ணு. இந்நிலையில் ஊர்த் தலைவர் வீட்டில் பாம்பு புகுந்துவிட அதைப் பிடித்து வனத்தில் விடுகிறார். கல் வீடு கட்டும் கனவில் ஊர் மக்களுடன் இணைந்து மாவட்டம் தாண்டி செங்கல் சூளையில் வேலை செய்யச் செல்கிறார். பாம்பு பிடித்த இடத்தில் நகைகள் காணாமல் போய்விட, அவர் மீது திருட்டுப் பழி விழுகிறது.

ராஜாகண்ணுவும் போலீஸாரின் பயங்கரத் தாக்குதலால் பாதிக்கப்படுகிறார். பிறகு ராஜாகண்ணுவும், அவரது நண்பர்கள் இருட்டப்பன், மொசக்கட்டியும் காவல் நிலையத்திலிருந்து தப்பி விடுகின்றனர். இந்நிலையில் கணவனின் நிலை அறியாது கையறு நிலையில் கர்ப்பிணிப் பெண்ணாகத் தவிக்கிறார் செங்கேணி.

தப்பு பண்றவங்களுக்கு பதவி, பணம், சாதின்னு நெறைய இருக்கு சார். பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதான இருக்கோம்" என வழக்கறிஞர்கள் போராட்டக்காரர்களின் முக்கியத்துவத்தை அழுத்தமாகவே பதியம் போட்டுள்ளார் இயக்குனர் .

காட்சி ஒன்றில் போலீஸ் அதிகாரி நடித்துள்ள பிரகாஷ்ராஜ் சூர்யாவிடம் "அதென்ன சார் போலீஸ்னா உங்களுக்கு அப்டி ஒரு வெறுப்பு?" என கேட்கிறார். அதற்கு வழக்கறிஞரான சூர்யா "வெறுப்பு இல்ல சார், இந்த சமூகத்தின் மீதான பொறுப்பும் அக்கறையும்." என பதிலளிக்கிறார். உடனே சூர்யா  "அப்டியா! சரி, அப்ப நாளைக்கு ஒரு முற்றுகை போராட்டம் இருக்கு வந்துருங்க." என போராட்டம் என்பது வன்முறை அல்ல அது சமூகத்தின் மீதான அக்கறை என மறைமுகமாக சாடியுள்ளார். அதுமட்டுமல்ல போராட்டம் எனக்கு ஒரு ஆயுதம் என குறிப்பிட்டிருப்பார். நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட, அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மெளனம் ஆபத்தானது." போன்ற வசனங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

நீதி மன்றத்தை காட்சிப்படுத்திய விதத்திலும்,படத்தில் இசை ஒளிப்பதிவு எடிட்டிங் , போன்ற எல்லா விதத்திலும் படம் நேர்த்தியாக உள்ளது விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் அவர்கள் அனுபவித்து வரும் துன்ப  துயரங்களையும்   இதை விட துல்லியமாக , கலைப்பூர்வமாக காட்சிபடுத்த இயலாது மொத்தத்தில் இருளர் இனத்தினர் படும் இன்னல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர்.