17 வயது சிறுவனும், 14 வயது சிறுமியும் காதலித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், சிறுமியின் பெற்றோர் சிறுவனை கடுமையாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியின் பெற்றோர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என வேலூர் மாவட்ட எஸ்பியிடம் சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்த்த 17 வயது சிறுவன், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். அதே போல், அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும், அங்குள்ள பள்ளியில் படித்து வந்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த சிறுவர் சிறுமிகளின் காதல் விசயம், சிறுமியின் பெற்றோரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தங்களது 14 வயது மகளின் காதலை ஏற்க மறுத்து உள்ளனர். 

இதனால், கடந்த 23 ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த காதல் ஜோடிகளைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடித்த சிறுமியின் பெற்றோர், கடந்த 24 ஆம் தேதி அவர்களது வீட்டில் வைத்து சிறுவனை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். 

அதில், பலத்த காயமடைந்த சிறுவன், மாடியில் இருந்து கீழே விழுந்ததாகவும், இதனால் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அந்த சிறுவன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த தகவல் சிறுவனின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், சிறுமியின் தந்தை மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார். சிறுமியின் தந்தையைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தான், வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறுவனின் தந்தை புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், “எனது மகன் காதலித்த வந்த சிறுமி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார் என்றும், அதன் பிறகு இருவரும் வீட்டை விட்டுச் சென்ற காரணத்தால், எனது மகனை மிக கடுமையாக சிறுமியின் தந்தை தாக்கி இருக்கிறார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “பாகாயம் காவல் துறையினர், எனது மகன் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும், இதனால் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை புகார் அளித்து உள்ளார். 

அதனிடையே, 17 வயது சிறுவனும் - 14 வயது சிறுமியும் காதலித்து வந்ததாகக் கூறப்படும் விவகாரம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.