தமிழ்நாட்டில் கிட்டதட்ட 586 நாட்களுக்கு பிறகு 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பதால், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. 

பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள் - கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்து வந்தன. தற்போது, கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் கிட்டதட்ட 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூர்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக தற்போது, கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த வந்த நிலையில், கிட்டதட்ட 19 மாதங்களுக்கு பிறகு 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. 

அதன் படி, தமிழகத்தில் 34 லட்சம் மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். 

அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுத்திருந்தார்.

அதாவது, “பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள்” என்று, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 586 நாட்களாக மூடிக்கிடந்த 1 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் படிக்கும் 32 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

அதன் படி, அந்தந்த ஊர்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் மீண்டும் இன்று பள்ளிக்கு வருகை தந்தனர். அதன் படி, அந்தந்த  தொகுதி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு பூங்கொத்து, பரிசுப் பொருட்கள் கொடுத்து மாணவ மாணவியரை பள்ளிக்குள் வரவேற்றனர். இந்த காட்சிகள் யாவும் காண்போரை கண்கவர செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.