எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, வெறுப்பும் இல்லை என்று வீடியோ பதிவின் மூலம் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நித்யானந்தா உடல் நலம் பாதித்து அவர் மரணம் அடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. கடத்தல், பாலியல் வழக்குகளில் குஜராத் மற்றும் கர்நாடகா போலீசாரால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடினார்.

இந்நிலையில் நித்யானந்தா ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி கைலாசா என்ற பெயரில் தனி நாடு உருவாக்கி உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டதோடு, பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவு ஆற்றினார்.

மேலும் இந்நிலையில் கடந்த வாரம் நித்யானந்தா உடல் நலம் பாதித்து அவர் மரணம் அடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதைத் தொடர்ந்து நித்யானந்தா தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டார்.

அந்த பதிவில் நான் இறக்கவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன். நான் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். எனக்கு 27 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து ‘நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு’ என்று அவர் எழுதுவது போல புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில் நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நேற்று புதிய பதிவு ஒன்றை நித்யானந்தா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பரமசிவனின் ஆசிகள்,  அனைத்து பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு ஒரு சிறந்த செய்தி, அனைத்து மருத்துவ அறிக்கைகளும் தெளிவாக உள்ளது. எனக்கு புற்று நோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதய பிரச்சினை எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள், நுரையீரல், குடல் சரியாக செயல்படுகிறது. கொரோனா உள்பட வைரஸ் தொடர்பான எந்த நோய்களும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்கிறது.

மேலும் தொடர்ந்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. அலோபதி அமைப்பின் மூலம் அனைத்து நோய் கண்டறிதல்களும் நடத்தப்பட்டுள்ளது. ஒரே விஷயம், என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளது. இதே போல எனக்கு உறக்கமும் இல்லை. நிர்வி கல்ப சமாதியில் எனது நித்ய சிவ பூஜையை தவிர உடலில் எந்த இயக்கமும் தன்னிச்சையாக நடக்கவில்லை.

என்னை கவனித்து கொண்டிருக்கும் டாக்டர்கள், சீடர்கள் என்னை கீழே படுக்க வைத்து நன்றாக மூச்சு விடும்படி வற்புறுத்துகிறார்கள். 6 மாதங்களுக்கு மேலாக என்னால் உணவு மற்றும் உறக்கம் இல்லாமல் இவ்வாறு நிர்வி கல்ப சமாதியில் இருப்பது எனக்கு வழக்கமானது தான். எனவே சீடர்கள் என் உடல் நிலை பற்றி கவலைபடத் தேவையில்லை. எனது கிரகங்களும், அனைத்து கிரகங்களும் எனக்கு சாதகமான நிலையில் உள்ளன. எனவே எனக்கு இப்போது மரணமோ, விதேக சமாதியோ இல்லை.

ஆனால் இப்போது கைலாசாவில் சிறிய விமான நிலையம் உள்ளது. ஆனால் பெரிய மருத்துவமனை உள்கட்டமைப்பு இல்லை. என்னை கவனித்து கொள்ளும் மருத்துவர் பக்தர்கள் மற்றும் மருத்துவ கவனிப்பு போன்ற பல இயந்திரங்கள் இருந்தால் அவர்கள் என் உடலை மேம்படுத்தி அதை செய்ய முடியும். எனது மருத்துவ பராமரிப்பிற்காகவோ அல்லது தேவைப்படும் இயந்திரங்களுக்காகவோ எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம். என் உடலை கவனித்து கொள்வதற்கு நீங்கள் அனைவரும் ஏற்கனவே போதுமானதைவிட அதிகமாக வழங்கி உள்ளீர்கள்.

எனது பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, எனது வாழ்க்கை மற்றும் நான் செய்த வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளேன். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை. இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை. எனது குருநாதர் அருணகிரி யோகேஸ்வரா என் உடல் முழுவதும் கலந்துள்ளார். என் உடல் எவ்வளவு காலம் சுறுசுறுப்பாகவும், உயிருடனும் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அவர் என்று அந்த பதிவில்  நித்யானந்தா தெரிவித்தார்.