தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் விளங்கும் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராகும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஈசிஆரில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்ற  நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி விமர்சன ரீதியாக பலரது பாராட்டுக்களைப்  பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிக்க ரீமேக் செய்யப்படுகிறது.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த சூரரைப்போற்று திரைப்படம் தற்போது தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிலும் 6 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் சிறந்த கலை இயக்குனர் உள்ளிட்ட விருதுகளை சூரரைப்போற்று கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.