சென்னை பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேலும் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதை அடுத்து இந்த வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.  

BETHEL NAGAR CHENNAI

கரோனா பேரிடர் மற்றும் மாணவர்களின் நலன் கருதி , ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஈஞ்சம்பாக்கத்தை அடுத்த பெத்தேல் நகர் பகுதியில் நீர்நிலை பகுதியில் வீடுகள் கட்டி இருப்பதாக சேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கடந்த 2019-ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து  தமிழக அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அரசு தரப்பில், கடந்த வார உத்தரவுக்கு பிறகு, 1052 வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 1007 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, 65 சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டது.

இதனையடுத்து  விசாரணையில், பாரபட்சமின்றி அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் 1,007 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் 65 சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்த நிலையில், சென்னை பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேலும் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில்  ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசத்தை நீட்டிக்க கோரி தமிழக அரசும் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில் பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருவதால் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரியும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முடிவை கைவிட கோரியும் பெத்தேல் நகர் பகுதி மக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.