தென்னிந்திய திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகையாக விளங்கும் நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நாகார்ஜுனாவின் மகனும், பிரபல நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து 4 ஆண்டுகள் திருமண வாழ்விற்கு பிறகு சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் சேர்ந்து அறிவித்தனர்.

இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான வதந்திகள் பரவி வந்தன. இந்த வதந்திகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில்,

“என் வாழ்வின் தனிப்பட்ட பிரச்சினைக்காக உங்கள் அனைவரின் உணர்ச்சிப்பூர்வமான அன்பு என்னை மூழ்கடித்தது... என் மீதான தவறான குற்றச்சாட்டுகளுக்கும் வதந்திகளுக்கும் எதிராக நீங்கள் காட்டிய அக்கறைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி... நான் வேறு ஒருவரை விரும்புகிறேன்... குழந்தைகள் வேண்டாம் என்றேன்... கருக்கலைப்பு செய்து கொண்டேன் மற்றும் நான் ஒரு சந்தர்ப்பவாதி என அவர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்...விவாகரத்து என்பது மிகவும் வலிமிகுந்த செயல்பாடு... இதிலிருந்து நான் மீண்டு வர சில காலம் ஆகும்... இது போன்ற என்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்து இடைவிடாது நடக்கின்றன... ஆனால் நான் ஒரு போதும் இவற்றை அனுமதிப்பதில்லை… அவர்கள் பேசுவது போல் நடந்து கொண்டதும் இல்லை... உடைந்து விடப் போவதுமில்லை…” 

என தெரிவித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் தனது திரைப்பயணத்தில் அடுத்தடுத்த பணிகளைத் தொடர ஆரம்பித்தார் சமந்தா.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் நாகார்ஜுனா பேட்டி ஒன்றில், “சமந்தா தான் முதலில் விவாகரத்து கோரியதாகவும், அதனை நாக சைதன்யா வருத்தத்தோடு ஏற்றுக் கொண்டதாகவும், இதனால் தங்களது குடும்ப கௌரவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நாக சைதன்யா மிகவும் வருந்தியதாகவும்” பேசியதாக மீண்டும் தற்போது வதந்திகள் பரவின.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்த பதிவில், 
“சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து குறித்து நான் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது & மிகவும் முட்டாள்தனமானது. தவறான வதந்திகளை செய்திகளாக பரப்ப வேண்டாம் என்று எனது ஊடக நண்பர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்”  என தெரிவித்துள்ளார்.