தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் பிரபாஸ், இயக்குனர் S.S.ராஜமௌலியின் பாகுபலி திரைப்படங்களுக்கு பிறகு தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக நான்கு திரைப்படங்கள் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகி, இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியாகவிருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருந்தது. கோவிட்19 கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பாலிவுட்டில் இதிகாச கதைகளமான ராமாயணத்தை அடித்தளமாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். ஆதிபுருஷ் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக தயாராகும் ப்ராஜெக்ட் கே படத்தில் தற்போது நடித்து வருகிறார். புராஜெக்ட் கே படத்தில் அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதனிடையே இந்திய அளவில் மெகா ஹிட் பிளாக்பஸ்டராக கொண்டாடப்பட்ட கன்னட திரையுலகின் K.G.F திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் சலார் படத்திலும் நடித்து வருகிறார். HOMBALE பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து சுருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க, மிரட்டலான வில்லனாக ஜெகபதி பாபு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவில் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 28) ஸ்ருதிஹாசனுக்கு பிற‌ந்த நாள் வாழ்த்துச் சொல்லும் விதமாக சலார் படத்திலிருந்து ஸ்ருதிஹாசனின் புதிய போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். கலாட்டா குழுமம் சார்பாக நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ருதிஹாசனின் சலார் பட போஸ்டர் இதோ…