“நாடாளுமன்றத்தில் எப்படி பேச வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்தவர் திமுக எம்.பி. கனிமொழி தான்” என்று, அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசியது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழக அரசியலில் திமுக - அதிமுக இரண்டுமே, எதிரும் புதிருமாக நிற்கும் இரு பெரும் கட்சிகள். 

தமிழக அரசியலில் சூழல் இப்படி இருக்கும் போது, இந்த இரு கட்சியில் உள்ளவர்கள் தங்களது எதிரி கட்சியில் உள்ளவர்களை விமர்சித்து பேசுவது வாடிக்கையான ஒன்று என்றாலும், அதற்கு மாறாக அவர்களை புகழ்ந்து பேசுவது என்பது அரிதிலும் அரிது.

அப்படி, மிகவும் அரிதான ஒன்று தான் தமிழக அரசியலில் தற்போது நிகழ்ந்திருக்கிறது.

அதுவும், “அதிமுகவின் கார் ஒன்று, நட்பு ரீதியில் அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?” அப்படியான ஒரு நிகழ்வுதான் தமிழக அரசியலில் தற்போது நிகழ்ந்திருக்கிறது.

அதாவது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்திப் பேசி சிறப்பித்தனர்.

அந்த வகையில், இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவரான நவநீதகிருஷ்ணன், மேடை ஏறி மணமக்களை வாழ்த்தி பேசினார். 

அவர் பேசும் போது, “நாடாளுமன்றத்தில் எப்படி நிகழ்வுகள் நடைபெறும் என்றும், நாடாளுமன்றத்தில் எப்படி பேச வேண்டும் என்றும், எனக்கு கற்றுக்கொடுத்தவர் திமுக எம்.பி. கனிமொழி தான்” என்று, புகழாராம் சூட்டினார்.

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் இந்த பேச்சுக்கு, அந்த திருமண விழாவில் கலந்துகொண்ட திமுகவினரும் சரி, இரு வீட்டார் உறவினர்களும் சரி, கை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

இப்படியாக, திமுக எம்.பி. கனிமொழியை அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், பெருமையோடு பாராட்டிப் பேசியது அங்கு கூடியிருந்த திமுகவினர் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

அதே நேரத்தில், திமுக எம்.பி. கனிமொழியை அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், புகழ்ந்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது அதிமுக வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.