தமிழ் திரை உலகின் ஆகச் சிறந்த நடிகராகவும் முன்னணி நட்சத்திர கதாநாயகனாகவும் வலம் வரும் நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிறந்த திரைப் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டின் இறுதியில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்து வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் உலக அளவில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும் ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா அடுத்தடுத்து பணிபுரியும் 5 இயக்குனர்களின் திரைப்படங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாக இருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கோவிட் 19 ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

எனவே விரைவில் வைரஸ் பரவல் குறையும் பட்சத்தில் பிப்ரவரி இறுதியில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படத்திலும், அடுத்ததாக விஸ்வாசம், அண்ணாத்த படங்களின் இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் சூர்யா.

தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வாடிவாசல் திரைப் படத்திலும் நடிக்கவிருக்கும் சூர்யா அதனைத்தொடர்ந்து சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குனர் பாலா, இயக்குனர் சிவா, இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோரின் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியிடும் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.