2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இந்த ஆண்டும் காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு அல்வா தயாரிப்பு நிகழ்ச்சிகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதாவது, நடப்பு ஆண்டு 2022 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசு தலைவர் உரையுடன் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது. 

அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1 ஆம் தேதி மறுநாள், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டே போலவே, இந்த ஆண்டும் காகிதமில்லா முறையில் நாடாளுமன்றத்ததில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

எப்போதுமே, பட்ஜெட் தயாரிக்கும் பணிகளானது பல மாதங்களுக்கு முன்பே துவங்கப்படுவது வழக்கமாக உள்ளது. 

அதன்படி, இந்த ஆண்டிற்கான பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி, பட்ஜெட் தாக்கல் தினத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே துவங்கும். 

குறிப்பிட்ட இந்த பணி துவங்குவதை குறிக்கும் வகையில் “அல்வா கிண்டும்” நிகழ்ச்சிகள் எப்போதும் நடப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த  “அல்வா கிண்டும்” நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் பங்கேற்று அந்த நிகழ்ச்சியை இன்னும் குஷிப்படுத்துவார்கள். 

இப்படியாக, இந்த  “அல்வா கிண்டும்” நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில், ஏராளமான ஊழியர்கள் பங்கேற்பார்கள். 

அப்படி பங்கேற்பவர்கள் அனைவருமே, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப்படுத்தப் படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி, அவர்கள் யாரும் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேச அனுமதி கிடையாது.

அந்த வகையில் தான், கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 

தற்போது அதன் தொடர்ச்சியாக, நடப்பு 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கி உள்ளன. 

ஆனால், இந்த முறை கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, எப்போதும் நடைபெறும் “அல்வா தயாரிப்பு நிகழ்ச்சிகள்” இந்த ஆண்டு அதிரடியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

அதற்குப் பதிலாக, பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும், இனிப்புகள் வழங்கப்பட்டன. 

அத்துடன், பட்ஜெட் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் கூடும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதனிடையே, பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிவிட்டதை குறிக்கும் வகையில் நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை” என்பது குறிப்பிடத்தக்கது.