தமிழக அளவில் திருப்பூர் தெற்கு காவல் நிலையம் முதலிடத்தைப் பிடித்து, தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சிறந்த டாப் 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த காவல் நிலையங்களில் பணி புரியும் காவலர்களுக்கு முதலமைச்சர் கையால் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

அதாவது, காவல் நிலையத்தில் பதிவாகும் வழக்குகளை விரைந்து முடிப்பது, குற்றங்கள் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது,  பதிவேடுகளை முறையாகப் பராமரித்து, உயர் அதிகாரிகளுக்குச் சரியாக சமர்ப்பிப்பது, பொது மக்களிடம் நடந்துகொள்ளும் விதம், காவல் நிலையங்களை தூய்மையாக வைத்திருப்பது, காவல் நிலையங்களில் எல்லா விதமான அடிப்படை வசதிகளும் செய்து வைத்திருப்பது போன்றவற்றின் அடிப்படையில் தான், சிறந்த காவல் நிலையங்கள் ஆண்டு தோறும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

அதன் படி, கடந்த ஆண்டிற்கான காவல் நிலையங்களைத் தேர்வு செய்ய ஐ.ஜி.க்கள் அபின் தினேஷ் மோடக், தினகரன், கணேச மூர்த்தி நியமிக்கப்பட்டனர். 

இவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் எந்த குறையும் இல்லாத வகையில் சிறந்த முறையில் திகழும் டாப் 10 காவல் நிலையங்களைத் தேர்வு செய்து உள்ளனர். 

அதன் படி, திருப்பூர் தெற்கு காவல் நிலையம் தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தைப் பிடித்து உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, 2 ஆம் இடத்தை திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையமும்,  3 ஆம் இடத்தை மதுரை அண்ணா நகர் காவல் நிலையமும் தேர்வாகி உள்ளன.

இது தொடர்பாக சிறந்த காவல் நிலையங்களைத் தேர்வு செய்த காவல் துறையின் உயர் அதிகாரிகள் கூறுகையில், “ஸ்மார்ட் ஸ்டேஷன் அடிப்படையில் அண்ணா நகர் ஸ்டேஷன் தேர்வாகி உள்ளது” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “மற்ற காவல் நிலையங்களில் எதாவது வசதிகள் குறைபாடு இருப்பதாகவும், தெப்பக்குளம், கரிமேடு உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் இடப்பற்றாக்குறையுடன் செயல்படுகின்றன என்றும், அங்கு போதிய காவலர்கள் இல்லாமல் பற்றாக்குறையும் இருப்பதாகவும்” தெரிவித்தனர்.

மேலும், “தற்போது சட்டம் ஒழுங்கு, குற்றப் பிரிவைச் சேர்த்து துணை ஆணையர், உதவி ஆணையர்கள் பார்த்தாலும்.. ஆள் பற்றாக்குறையால் ரோந்து செல்வது குறைவு உள்ளிட்ட காரணங்களால் குற்றங்கள் தொடர்கின்றன என்றும், அதிகாரிகள் ஒன்று அல்லது 2 ஆண்டுகளில் இடம் மாறி செல்வதால் காவல் நிலையங்களில் வளர்ச்சி குறித்து ஆர்வம் காட்டுவதில்லை” என்கிற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

இதனிடையே, கடந்த ஆண்டு தமிழக அளவில் சேலம் டவுன் காவல் நிலையம், 5,558 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்து, சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.